ரஷ்யா - உக்ரைன்

'அவர்கள் ஏன் என்னை சுட்டார்கள் என தெரியவில்லை' ரஷ்யாவால் உடலின் ஒரு பாகத்தை இழந்த சிறுமி

EllusamyKarthik

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து உக்கிரமாக போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ரஷ்ய படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஈவு இரக்கமின்றி 9 வயது சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் ரஷ்ய படையினர். 

அந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டடிப்பட்ட அந்த பெண் குழந்தை தனது இடது கையை இழந்துள்ளார். மருத்துவர்கள் வேறு வழியே இல்லாமல் அவரது இடது கையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். இப்போது அவரது வாழ்க்கையே மேலும் கீழுமாக மாறி நிற்கிறது. 

தாக்குதலுக்கு ஆளான சிறுமியின் பெயர் ஷாஷா என தெரிகிறது. கிவ் நகரை சேர்ந்த அவர் தனது குடும்பத்தினருடன் புகலிடம் தேடி சென்ற போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவரது தந்தை இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 

“அவர்கள் ஏன் என்னை சுட்டார்கள் என தெரியவில்லை. இதனை எதிர்பாராத விபத்தாகவே நான் பார்க்கிறேன். அவர்கள் என்னை காயப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். 

எனது கையில் குண்டு தாக்கியிருந்தது. நான் எனது சகோதரியை பின் தொடர்ந்து ஓடினேன். பின்னர் நான் சுயநினைவை இழந்தேன். பின்னர் யாரோ என்னை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன்” என தனக்கு நடந்த கொடூரத்தை பிஞ்சு மனதோடு சொல்கிறார் ஷாஷா. 

காரில் ஷாஷா, அவரது சகோதரி, தந்தை மற்றும் தாய் தப்ப முயன்றுள்ளனர். அப்போது அவர்களது காரின் மீது குண்டு மழை பொழிந்துள்ளது ரஷ்ய படை. அதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார். பின்னர் மூவரும் தப்பியுள்ளனர். அப்போதுதான் ஷாஷாவுக்கு குண்டு பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.