ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனில் அனைவரின் கையிலும் ஆயுதம் - அதிகரிக்கும் கொள்ளை, பாலியல் சம்பவங்கள்

உக்ரைனில் அனைவரின் கையிலும் ஆயுதம் - அதிகரிக்கும் கொள்ளை, பாலியல் சம்பவங்கள்

JustinDurai

உக்ரைனில் அனைவரின் கையிலும் ஆயுதங்கள் கொடுத்துள்ளதால் பாலியல் வன்கொடுமை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலால் அவர்கள் உயிருக்கு பயந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதனிடையே தலைநகர் கீவ்வில் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி உள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக ஏராளமான பொதுமக்கள் ரஷிய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நவீனரக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், கையெறிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றி வருகின்றனர். வக்கீல்கள், டாக்டர்கள், ஐ.டி. ஊழியர் என அனைத்து தரப்பு மக்களும் கீவ் நகர தெருக்களில் ஆயுதங்கள் ஏந்தி இருப்பதை காண முடிந்தது. இந்த நிலையில் உக்ரைனில் அனைவரின் கையிலும் ஆயுதங்கள் இருப்பதால் பாலியல் வன்கொடுமை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று கீவில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒருவர் பேசும்போது, '' உக்ரைனில் உள்ள குற்றவாளிகள் இராணுவ தர ஆயுதங்களைப் பெற்றுள்ளனர். இதனால் கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் அனைத்து வகையான குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன'' என்று கூறி உள்ளார்.