உக்ரைனில் சிக்கியுள்ள பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி தப்பி வந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், இன்று மட்டும் 8 விமானங்கள் டெல்லிக்கு வருகின்றன. காலையில் வந்த இரண்டு விமானங்களில் 28 தமிழக மாணவர்கள் உள்பட சுமார் 350 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.
இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி வந்தால் பாதுகாப்பு நிச்சயம் என்று இந்திய தூதரகம் அறிவித்திருந்த நிலையில், அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் எல்லைகளை அடைந்துள்ளனர்.
இது குறித்து உக்ரைனிலிருந்து ருமேனியா வழியாக பாகிஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவர் கூறும்போது, "இந்தியக் கொடியை ஏந்திச் சென்றால் பத்திரமாக எல்லையை அடையலாம் என்பதை தூதரக அறிவிக்கை மூலம் தெரிந்துகொண்டோம். அதனால் மூவர்ணக் கொடியை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி எல்லையை அடைந்தோம். நான் மட்டுமல்ல, சில துருக்கிய மாணவர்களும் இதுபோன்று செய்தே எல்லையை அடைந்தனர்” என்றார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் துருக்கி, பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போர் மிகுந்த அழிவை ஏற்படுத்தும்; நாங்கள் தனியாக இல்லை” - ரஷ்யா எச்சரிக்கை