Ajinkya Rahane & MS Dhoni File Image
Cricket

‘ரஹானேவை எடுக்கலாமா..?’ ஆலோசனை கேட்ட பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு சிக்னல் கொடுத்த தோனி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் ரஹானேவை தேர்வு செய்வதற்கு முன்பாக தோனியிடம் பிசிசிஐ ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Justindurai S

நடப்பு ஐ.பி.எல். தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரஹானே, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். சிஎஸ்கே அணியில் தனது அபாரமான ஆட்டங்களின் மூலம் ரஹானேவுக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்த சூழலில் தற்போது 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடைசியாக 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆடினார். அந்தத் தொடரில் 6 இன்னிங்சில் வெறும் 136 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியதால் அடுத்தடுத்த போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார்.

Ajinkya Rahane

ஆனாலும் நம்பிக்கையை தளரவிடாத ரஹானே, இழந்த ஃபார்மை மீட்க உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அப்படி இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இரட்டை சதம் உள்பட 634 ரன்கள் (11 இன்னிங்ஸ்) குவித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே. அணிக்காக களம் கண்டுள்ள அவர் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம் உள்பட 224 ரன்கள் எடுத்து சூப்பர் ஃபார்மில் உள்ளார்.

BCCI

இதனால் அவருக்கு மீண்டும் இந்திய அணியின் வாசல் கதவு திறந்திருக்கிறது. இந்திய அணியில் ரஹானேவின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட சூழலில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே சேர்க்கப்பட்டார். இது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனியுடன் கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தோனி கூறிய நம்பிக்கையான வார்த்தைகளை தேர்வுக்குழு கருத்தில்கொண்டதாகவும் அதனடிப்படையிலேயே ரஹானே சேர்க்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.