முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் (TKM) மொத்த விற்பனை, கடந்த அக்டோபர் மாதம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் மொத்த விற்பனை 42 ஆயிரத்து 892 ஆக இருந்தது. முந்தைய 2024ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 30 ஆயிரத்து 845 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 ஆயிரத்து 635 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TKM விற்பனை-சேவை- பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரிவின் துணைத் தலைவர் வரிந்தர் வாத்வா இது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதாவது, நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுவதும் உள்ள தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட festive edition பதிப்புகளான Urban Cruiser Hyryder Aero Edition மற்றும் 2025 Fortuner Leader Edition ஆகியவை விற்பனையை உயர்த்த உதவியுள்ளன எனத் தெரிவித்திருக்கிறார்.
"திருவிழா காலத்தில் சாதகமான பொருளாதார சூழல், அரசாங்கத்தின் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் போன்றவை சந்தையின் உறுதித்தன்மையை அதிகரித்துள்ளது. TKM-இல், இது வாடிக்கையாளர் விசாரிப்புகள் (customer enquiries) மற்றும் ஆர்டர் பெறுதலில் (order intakes) குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளது, இது ஒட்டுமொத்தமாக எங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது" என்று வாத்வா தெரிவித்திருக்கிறார்.