மாருதி நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான தனது புதிய மாடல் காரான "eBorne VITARA" வை வரும் ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கார் சுமார் ரூ. 20லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதியின் புதிய சகாப்தம் "eVitara":
மாருதி பல ஆண்டுகளாக சந்தையில் அனைத்து வகையான கார்களை விற்பனை செய்து வந்தாலும், மின்சார கார் உற்பத்தியில் கால் பதிக்கவில்லை. அந்த குறையை தீர்க்க மாருதி தற்போது தனது முதல் மின்சார வாகனமான இந்த eVitara மின்சார காரை வரும் ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் அறிமுகம் செய்யவிருக்கிறது.
வடிவமைப்பு:
மாருதி இவிடாரா ஒரு ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படங்களை பார்க்கையில் 18-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்களை (19-இன்ச் AWD) எதிர்பார்க்கலாம். பின்புற கதவு கைப்பிடிகள் சி-பில்லர் மீது பொருத்தப்பட்டிருப்பதால், அது மிகவும் நவீன தோற்றத்தை அளிக்கிறது. பின்புறம் LED டெயில் விளக்குகள், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறம் LED ஹெட்லைட்கள் மற்றும் (டே டைம் ரன்னிங் லைட்ஸ்) கொண்ட Y வடிவ LED DRLS-ஐ கொண்டுள்ளது.
அம்சங்கள்:
வண்டியின் நீளம் 4,275 மிமீ, அகலம் 1,800 மிமீ, உயரம் 1,635 மிமீ ஆகும். வீல்பேஸ் 2,700 மிமீ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ கொண்டுள்ளது. வீல் சைஸ் 18 & 19 இன்ச் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் அமைந்துள்ளன. குளோபல்-ஸ்பெக் வெர்ஷனில் காணப்படுவது போல், உட்புறம் டூயல்-டோன் தீமுடன் இரட்டை ஸ்கிரீன்ஸ் உள்ளது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவரின் காட்சிக்காகவும். கேபினில் ஸ்போர்ட்டி தோற்றமுடைய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி வென்ட்கள் உள்ளன. மேலும் இதில் ஆட்டோமெடிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேடட் முன் இருக்கைகள், ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த வண்டி ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் மற்றும் லெவல்-2 ADAS கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்களைப் பெறும். கூடுதலாக இந்தியா-ஸ்பெக் வெர்ஷன் ADAS-ஐப் பெற்றால், இந்த கார் பிரீமியம் பாதுகாப்பு அம்சத்தைப் பெறும் முதல் மாருதி கார் ஆகும்.
செயல்திறன்:
Maruti eVitara ஆனது Born Ev Platform-ல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக் 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு வேரியன்டில் அறிமுகமாகவுள்ளது. பவர்டிரெய்ன் பொறுத்தவரை பேஸ் வேரியன்டில் 172 பிஎச்பி மற்றும் 189 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் முன்-சக்கர இயக்கி (FWD) மோட்டாரை வழங்குகிறது. 61 kWh வேரியன்டில் 4WD-ஐ செயல்படுத்தும் கூடுதல் பின்புற மோட்டார் கொண்ட டூயல்-மோட்டார் அமைப்பை வழங்குகிறது. இந்த கட்டமைப்பு 181 bhp மற்றும் 300 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.
வண்டியின் எஸ்டிமேடட் ரேஞ் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது 600 கிமீ ரேஞ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி இவிட்டாராவின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Tata Curvv EV, Mahindra BE 6, MG ZS EV மற்றும் வரவிருக்கும் Hyundai Creta EV ஆகியவற்றுடன் போட்டியிடும்.
இந்த வண்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஜப்பானில் அறிமுகமாகிறது. மாருதி சுஸுகி உற்பத்தியின் ஒரு பகுதி இந்தியாவில் நடைபெற்றாலும், முதற்கட்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் சர்வதேச சந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.