ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், மஹிந்தரா அண்டு மஹிந்தரா, ஹூண்டாய், டொயோட்டா, ஸ்கோடா, ரெனால்ட், கியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை குறைத்துள்ளன. ஜிஎஸ்டி குறைப்பின் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.
அதன்படி, நாட்டின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, பல்வேறு மாடல் கார்களின் விலையை 46 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. அதிகபட்சமாக, எஸ்-பிரஸ்ஸோ காரின் விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல, ஆல்டோ, SWIFT, டிசையர் உள்ளிட்ட கார்களின் விலையையும் குறைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் கார்களின் விலையை 65 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. மஹிந்தரா அண்டு மஹிந்தரா நிறுவனம் தங்கள் நிறுவன கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விலையை 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், டொயோட்டா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரையும் தங்கள் கார்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளன. கியா நிறுவனத்தின் கார்கள் விலை 48ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஸ்கோடா நிறுவனம் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் விழாக்கால சலுகையையும் சேர்த்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையிலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. ரெனால்ட் கார்கள் விலை 96 ஆயிரம் ரூபாய் வரையிலும், நிசான் கார்கள் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.