representational image Pt web
லைஃப்ஸ்டைல்

தமிழகத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகளில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள "மாநில நிதிகள்: 2025-26ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆய்வு" என்ற அறிக்கையின்படி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மக்கள்தொகை உருமாற்றம் சார்ந்த பெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொண்டுள்ளன. மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை சில பத்தாண்டுகளுக்கு முன்பே வெற்றிகரமாக அமல்படுத்தி அதன் மூலம் சமூக-வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னிலை வகித்து வரும் இந்த மாநிலங்களில் இப்போது முதியோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துவருகிறது.

representational image

2026-ஆம் ஆண்டில், கேரளாவின் மொத்த மக்கள்தொகையில் 18.7 விழுக்காடும், தமிழ்நாட்டில் 15.8 விழுக்காடும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டிற்குள், பிறரைச் சார்ந்து வாழும் முதியோர்களின் விகிதம் கேரளாவில் 38.3 விழுக்காடாகவும் தமிழ்நாட்டில் 32.7 விழுக்காடாகவும் உயரும். அதாவது, அடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் அதிக முதியோரைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கும். தமிழ்நாட்டில் சராசரியாக மூன்றில் ஒருவர் 60 வயதைக் கடந்த முதியவராக இருப்பார். இதனால் இந்த மாநிலங்களின் நிதிச் சுமை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதியோர்களின் எண்ணிக்கை உயர்வதால் ஓய்வூதியம் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அரசின் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும். உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைவதால், நுகர்வு மற்றும் வருமான வளர்ச்சி குறைந்து, மாநிலத்தின் வரி வருவாய் ஈட்டும் திறன் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, பெண்களின் பணி பங்கேற்பு விகிதத்தை அதிகரித்தல், முதியோர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை உயர்த்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்கள் அவசியம் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.