பீட்டர் காட்வின் ஒரு புகழ்பெற்ற ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். அவரது புத்தகங்கள் ஆப்பிரிக்காவின் அரசியல் நிலைமைகளை ஆழமாக விவரிக்கின்றன. 60 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கும் பீட்டர் காட்வின், "When a Crocodile Eats the Sun" , " The Fear" என பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் பேசியதிலிருந்து,
அரசியல் கட்சிக்கென, அதன சித்தாந்தங்களால் உந்தப்பட்டு வன்முறையில் ஈடுபடும் கலாசாரம் உலகம் முழுக்கவே இருக்கின்றது. அடுத்தடுத்த தேர்தல்களில், இந்த அரசியல் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, அவர்கள் மொத்தமாய் மன்னிக்கப்பட்டு புனிதர்கள் ஆக்கப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.?
நான் இருந்த ஜிம்பாப்வேயில் இப்படித்தான் நிகழ்ந்தது. அதனையொட்டித்தான் FEAR என்கிற புத்தகத்தை எழுதினேன். இதற்கு முன்பு டிரம்ப் தோற்ற போதும், இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது மிகவும் மோசமானதொரு நடைமுறை. இதை நார்மலைஸ் செய்யும் போக்கு மிகவும் ஆபத்தானது. " நீ எனக்காக வேலை செய், வன்முறையில் ஈடுபடு. நான் உனக்குத் துணை நிற்பேன்" என வன்முறையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய ஆட்சியாளர்களை, வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆபத்தான அணுகுமுறை. ஜிம்பாப்வேயை ஆண்ட இராபர்ட் முகாபேயின் ஆட்சிக்காலத்தில் இதுதான் நடந்தது. நான் ஒரு மனித உரிமை ஆர்வலராக இப்படி பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடியிருக்கிறேன். அவர்கள் பணமோ, பொருளோ ஏன் எந்தவொரு இழப்பீடையும் எதிர்பார்ப்பதேயில்லை. இப்படி நடந்திருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்ளுங்கள் என்று தான் அவர்கள் ஒவ்வொருமுறையும் மன்றாடுகிறார்கள்.
புலம்பெயர்பவர்கள், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள்.. நாடு விட்டு நாடு கடந்து செல்லும் இந்த மக்கள் குறித்து Exit Wounds புத்தகத்தில் எழுதியிருப்பீர்கள். அமெரிக்காவில் நடைபெறுவதை கவனித்து வருகிறீர்களா..?
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக இதுதான் இருக்கப்போகிறது. நான் அரசியல்வாதி அல்ல. ஆனால், இந்தப் பிரச்னையை மிக எளிதாக கையாண்டிருக்கலாம். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை மொத்தமாக அமெரிக்காவைவிட்டு நாடு கடத்தினால், அமெரிக்க பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். நிறைய இடங்களில் அவர்களைத்தான் குறைவான விலைக்கு வேலையில் அமர்த்தியிருப்பார்கள். இப்படியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் கடைகளுக்கு அபராதம் விதித்திருக்கலாம். ஆனால், அதைவிடுத்து இந்தப் பிரச்னையை வைத்து பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.
யானைகளை சட்டப்படி ஜிம்பாப்வேயில் கொல்கிறார்கள். யானையைக் கொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது?
அது மிகவும் சிக்கலான ஒன்று. யானைகளைக் கொல்வது எளிதல்ல. உண்மையில் அந்த மக்கள் அதை விரும்புவதுகூட கிடையாது. கிழக்கு ஆப்பிரிக்காவில் யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடுவார்கள். தெற்கு ஆப்பிரிக்காவில் யானைகள் அதிகம். ஒரு இடத்தில் யானைகள் குறைவு. மற்ற இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு யானைகள் இருக்கின்றன. ஆனால், யானைகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிதான காரியம் இல்லை. புதிய இடங்களில் யானைகளால் எளிதாக இருக்கவும் முடியாது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் வேட்டையாடுவதை தடை செய்ய போராடுகிறார்கள். ஆனால், தெற்கின் நிலை தலைகீழ். யானைகளாலேயே எளிதாக நகர முடிவதில்லை. யானைகளை எல்லாம் செலிப்ரிட்டி விலங்குகள் என்றே சொல்லலாம். ஒரு யானையின் மரணம் என்பது எளிதாக தலைப்புச் செய்தி ஆகிவிடும். ஆப்பிரிக்க தேசங்களில் குறைவான அளவு யானைகள் கொல்லப்படுவது இங்கு தான். அரசு அனுமதியின் பேரி யானைகள் கொல்லப்படும்போது, அதன் இறைச்சியை அங்கிருக்கும் மக்களிடம் தருவார்கள். ஆனால், யானைகளைக் கொல்வது எளிதல்ல. மனிதர்களிடம் வெகு எளிதாக பழகக்கூடிய மிருகங்களில் யானையும் ஒன்று. இங்கே யானைகள் தனியாக காடுகளில் வாழ்வதில்லை. அவை மனிதர்களோடு மனிதர்களாக வாழ்கின்றன. அதனாலேயே இழப்புகளும் அதிகமாக இருக்கின்றன.