ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நான்காம் நாள் அதிகாரம், நீதி, தலைமைத்துவம் மற்றும் உலக அரசியல் குறித்து ஆழமான உரையாடல்களுடன் நிறைவடைந்தது. முன்னணி ஆளுமைகள் இலக்கியம், அரசியல், சட்டம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வு, உலகளாவிய கருத்துக்களமாக நிகழ்காலத்தை கேள்விக்குள்ளாக்கி, நியாயமான எதிர்காலத்தை கற்பனை செய்யும் முயற்சியாக அமைந்தது.
வேதாந்தா குழுமம் வழங்கும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நான்காம் நாள், அதன் பாரம்பரியமான காரசாரமான விவாதங்கள் மற்றும் விரிவான உரையாடல்களுடன் தொடர்ந்தது. அதிகாரம், நீதி, தலைமைத்துவம் மற்றும் உலகை வடிவமைக்கும் கதைகள் குறித்து சிந்திக்க இலக்கியம், அரசியல், சட்டம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் முன்னணி ஆளுமைகள் இந்நாளில் ஒன்றிணைந்தனர்.
முன்னதாக, 3-ம் நாளில், நகைச்சுவை நடிகரும் நடிகருமான விர் தாஸ் (Vir Das) உடனான அமர்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. துயரம் (grief) குறித்த ஆழமான உரையாடல் இதில் இடம்பெற்றது. துயரம் என்பது முழுமையாக சுவாசிக்க முடியாத நிலை என்று விர் தாஸ் விவரித்தார். நமக்கு வெளியே வாழ்ந்த ஒருவர் நமக்குள்ளே வாழத் தொடங்கும் போது, இழப்பு உடலையும் ஆன்மாவையும் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை அவர் விளக்கினார். சிகாகோவில் பாத்திரம் கழுவுபவராகத் தொடங்கி, பொழுதுபோக்கு உலகின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றது வரையிலான தனது நம்பக்க முடியாத பயணத்தை, எம்மி (Emmy) விருதை கையில் ஏந்தியிருந்த அந்த இரவில் நினைவுகூர்ந்ததையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
புகழ்பெற்ற நாவலாசிரியர் ரிச்சர்ட் ஃப்லானகன் (Richard Flanagan), டிம் ஆடம்ஸுடன் இணைந்து, சூழலியல் சரிவு, அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்ச்சைக்குரிய வரலாறுகள் நிறைந்த இக்காலத்தில் இலக்கியத்தின் தார்மீக அவசியத்தை ஆய்வு செய்தார். கதைகள் மூலம் சாட்சியாக இருப்பதும், மெத்தனப்போக்கை எதிர்ப்பதும் எழுத்தாளரின் பொறுப்பு என்று ஃப்லானகன் குறிப்பிட்டார். இவரது புத்தகம் நினைவு, அறிவியல் மற்றும் வரலாறு ஆகியவற்றின் கலவையாகத் தனிப்பட்ட வரலாற்றை உலக நிகழ்வுகளுடன் இணைக்கிறது. நினைவு என்பது எப்போதும் சாட்சியம் அளிக்கும் செயல் அல்ல, அது ஒரு உருவாக்கத்தின் செயல் (act of creation) என்று அவர் கூறினார்.
"நெருக்கடியில் ஒரு கண்டம்: ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய கதை" (A Continent in Crisis) என்ற அமர்வில், போலந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரடோஸ்லாவ் சிக்கோர்ஸ்கி (Radosław Sikorski), நவ்தேஜ் சர்னாவுடன் இணைந்து ஐரோப்பாவின் அரசியல் பிளவுகளைப் பற்றி கூர்மையாக விவாதித்தார். உக்ரைன் போர், ரஷ்யாவின் புவிசார் அரசியல் லட்சியங்கள் மற்றும் ஐரோப்பிய ஒற்றுமை மற்றும் உலகப் பாதுகாப்பின் எதிர்காலம் ஆகியவை இதில் விவாதிக்கப்பட்டன.
அயர்லாந்தின் முன்னாள் பிரதமர் லியோ வரத்கர் (Leo Varadkar), ஜார்ஜினா காட்வின் உடனான உரையாடலில் "ஸ்பீக்கிங் மை மைண்ட்" (Speaking My Mind) என்ற தலைப்பில் தோன்றினார். கெவின் கெல்லியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமர்வுக்கு, இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகம் மற்றும் கல்ச்சர் அயர்லாந்து ஆதரவு அளித்தன. பொது வாழ்க்கை, அரசியல் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கத்தில் முடிவெடுப்பதை வடிவமைக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்த வெளிப்படையான பார்வைகளை இந்த அமர்வு வழங்கியது.
"நீதி குறித்த கருத்துக்கள்" (Ideas of Justice) என்பது அந்நாளின் மிக முக்கியமான உரையாடல்களில் ஒன்றாக அமைந்தது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் (Justice D.Y. Chandrachud), வீர் சிங்வியுடன் உரையாடினார். அரசியல் சாசன தார்மீகம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக சமூகத்தில் நீதியின் வளர்ந்து வரும் அர்த்தம் குறித்து சந்திரசூட் பேசினார். "அரசியலமைப்பு ஏன் முக்கியமானது" (Why the Constitution Matters) என்ற தனது புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பு ஜனநாயகத்தில் நீதி என்றால் என்ன என்பதை இந்த விவாதம் ஆராய்ந்தது. நீதி என்பது வெறும் கோட்பாடு அல்ல, அது வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பொறுப்புக்கூறலில் வேரூன்றிய வாழ்வியல் முறை என்று அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பை சமூகத்தை ஒன்றிணைக்கும் "பொதுவான கல்" என்று வர்ணித்த அவர், கண்ணியம், சுதந்திரம் மற்றும் விரைவான விசாரணைக்கான உரிமையை உள்ளடக்கியதாக நீதிமன்றங்கள் அதை எவ்வாறு விரிவுபடுத்தியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஹெச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி லிமிடெட் வழங்கிய "இது அனைவருக்கும்" (This Is For Everyone) என்ற அமர்வில் இணையத்தின் எதிர்காலம் முக்கிய இடம்பிடித்தது. வையக விரிவு வலையை (World Wide Web) கண்டுபிடித்த சர் டிம் பெர்னர்ஸ்-லீ (Sir Tim Berners-Lee), ஜார்ஜினா காட்வினுடன் டிஜிட்டல் உரிமைகள், பரவலாக்கம் மற்றும் இணையத்தைப் பொதுச் சொத்தாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசரத் தேவை குறித்துப் பேசினார்.
நாளின் இறுதியில் இலக்கிய முத்தாய்ப்பாக "தி மர்டர் டயலாக்" (The Murder Dialogue) அமைந்தது. திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் எழுத்தாளர் ருத்ரனில் சென்குப்தா ஆகியோர் அம்ரிதா மஹாலேவுடன் இணைந்து குற்றப் புனைகதை (crime fiction), சினிமா கதைசொல்லல் மற்றும் இந்த வகையின் மையத்தில் உள்ள தார்மீக சிக்கல்கள் குறித்து விவாதித்தனர். டேட்டிங் செயலிகள் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றி கொலை செய்யும் ஒரு இளம் பெண்ணின் பயணத்தைச் சொல்லும் "ஸ்வைப் ரைட் டு கில்" (Swipe Right to Kill) பற்றி பட்டாச்சார்யா விவாதித்தார். சென்குப்தா தனது முதல் நாவலான 'தி பீஸ்ட் விதின்' (The Beast Within) பற்றிப் பேசினார். டெல்லி காவல்துறையுடனான தனது நீண்டகால அனுபவத்தைக் கொண்டு, மறக்கடிக்கப்படக்கூடிய ஒரு சிறு வயது வீட்டுப் பணியாளரின் மரணத்தை மையப்படுத்தி இதை எழுதியதாக அவர் கூறினார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா, இலக்கியம், அரசியல், சட்டம் மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்து நிகழ்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மற்றும் மிகவும் நியாயமான எதிர்காலத்தைக் கற்பனை செய்யும் உலகளாவிய கருத்துக்களமாகத் தனது பங்கை 4-ம் நாள் நிறைவில் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த விழாவின் இறுதி நாளான ஐந்தாம் நாளில், பின்வரும் தலைப்புகளில் உரையாடல்கள் நடைபெறவுள்ளன:
ஆலிஸ் ஆஸ்வால்ட் உடன் ஜீத் தாயில் உரையாடும் "சொற்கள் மற்றும் உலகங்கள் வழியாக ஒரு பயணம்".
மங்கா மற்றும் கிராஃபிக் நாவல்களைக் கொண்டாடும் விதமாக ராதிகா ஜா மற்றும் மொழிபெயர்ப்பாளர் டோமோகோ கிகுச்சியுடன் யோஷிடோகி ஓய்மா, உஜான் தத்தா மற்றும் அபீர் கபூர் உரையாடல்.
ஆனந்த் நீலகண்டன், மிருதுளா ரமேஷ் உடன் உரையாடும் "குமரிக்கண்டத்தின் கதை".
ஜானினா ராமிரெஸ், நாராயணி பாசுவுடன் உரையாடும் "புராணங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான பெண்கள்".