49வது சென்னைப் புத்தக கண்காட்சி Pt Web
இலக்கியம்

சென்னைப் புத்தகக் காட்சி | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? தவறவிடக்கூடாத புத்தகங்கள்!

49ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தருணத்தில் உங்களிடம் என்றும் இருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

PT WEB

நொய்யல்

நொய்யல்: தேவிபாரதி

பதிப்பகம்: தன்னறம்

25 ஆண்டுகளுக்கு மேலாக தேவிபாரதி எழுதிய நாவல் இது. தேவிபாரதியின் நாவல்களில், தொன்மங்களும் நாட்டார்தன்மையும் செவ்வியல் தன்மையும் ஒருங்கே கொண்ட நாவல் இது என்று சொல்லலாம். நொய்யல் கரையோரத்தில் அவர் சித்தரிக்கும் மனிதர்களின் வாழ்க்கை ரத்தமும் சதையுமானது மட்டுமல்லாமல் மாயக் கூறுகள் கொண்டதும் ஆகும்.

1001 அரேபிய இரவுகள்

1001 அரேபிய இரவுகள்

தமிழில்: சஃபி

பதிப்பகம்: உயிர்மை

உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்புகளுள் ஒன்று 1001 அரேபிய இரவுகள் நூல். அரபு மொழியில் பல நூற்றாண்டுகளாகப் பல கதைசொல்லிகளால் உருவான இலக்கியம் இது. மாயத் தருணங்களையும் புதிரான கதைசொல்லலையும் கொண்ட நூல் இது.

குறும்பன்

குறும்பன்: கஃபூர் குல்யாமின்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

புகழ்பெற்ற ரஷ்ய நாவலின் மொழிபெயர்ப்பு இது. எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டுக்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்களை இந்த நாவல் பேசுகிறது. ரஷ்ய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்டது இந்நாவல்.

தாவோ தே ஜிங்

தாவோ தே ஜிங்: லாவோ ட்சு

தமிழில்: சி.மணி

உலகின் பொதுமறைகளுள் ஒன்றாகக் கருதக்கூடிய நூல், தாவோ தே ஜிங். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சீன மொழியில் எழுதப்பட்ட இந்நூல், இன்றும் நம் வாழ்க்கைக்கு அவசியமான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இருத்தலின் ரகசியங்கள், வாழ்க்கைக்கு மிதமான போக்கு ஏன் அவசியம் என்பதையெல்லாம் பற்றி இந்த நூல் பேசுகிறது.

அ.முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

அ.முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

பதிப்பகம்: நற்றிணை

தமிழில் எழுதப்பட்ட சர்வதேசக் கதைகள் என்று இந்தக் கதைகளைச் சொல்லலாம். இலங்கையில் தொடங்கி உலகின் பல நாடுகளிலும் இந்தக் கதைகள் நிகழ்கின்றன. அள்ள அள்ள சுவாரசியம் குறையாத எழுத்துக்குச் சொந்தக்காரர் அ.முத்துலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.