இணைய வழிக் கொள்ளைகளையும் குற்றங்களையும் கட்டுப்படுத்த அரசு இயந்திரமும், வல்லுநர்களும் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சைபர் குற்றவாளிகள் புதுப்புது உத்திகளால் பொதுமக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி, தனிமனித தரவுகளை திருடுவது, இணைய தளங்களையும், சமூக ஊடக கணக்குகளையும் ஹேக் செய்வது, அரசிடம் இருந்து குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலோ வருவது போல ஏற்பாடு செய்து அதன்மூலம் பணம் பறிப்பது, சைபர் மிரட்டல்கள் மற்றும் அவதூறுகளின் வழியே பணம் கேட்டு மிரட்டுவது, கணினிகளில் இருக்கும் தரவுகளை லாக் செய்துகொண்டு பணம் கொடுத்தால்தான் அதை மீண்டும் ஒப்படைப்போம் என்பதுபோன்ற Ransomware தாக்குதல்கள், குழந்தைகள் தொடர்பான சைபர் குற்றங்கள் என சைபர் குற்றங்களை அடிக்கிக்கொண்டே செல்லலாம்.
காவல்துறையினரும், வல்லுநர்களும் இவற்றைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், தினமும் புதுப்புது வழிகளில் இத்தகைய குற்றங்கள் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. லிங்க்களை க்ளிக் செய்வதன் வழியே ஆரம்பித்த இது, போலியான ஆப்களை இன்ஸ்டால் செய்ய வைத்ததன் வழி தொடர்ந்தது. இதன் அடுத்தகட்டமாக Wi-Fi ஹேக்கிங் எல்லாம் நடந்தன. தற்போது இந்த மோசடி ஹாட்ஸ்பாட் ஷேரிங்கில் வந்து நிற்கிறது.
ஆம், ஏதேனும் ஒரு கடையில் நாம் அவசரமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருப்போம். அப்போது, அதே அவசரத்தோடு வேறு நபர் ஹாட்ஸ்பாட் கேட்டு நிற்பார். நாமும் பணம் செலுத்துவதற்குத்தானே என கொடுத்துவிடுவோம். இங்கு ஆரம்பிக்கிறது சிக்கல்.
சமீபத்தில், இதேபோன்று ஒரு பெண் தான் சந்தித்த சூழலை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதை the free press journal செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில், மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் 50 வயது பெண் ஒருவர் மெட்ரோ டிக்கெட்டை எடுக்க நெட்வொர்க் சரியாகக் கிடைக்காத நிலையில் இப்பெண்ணிடம் ஹாட்ஸ்பாட் கேட்டு நின்றிருக்கிறார். இவரும் மொபைல் ஹாட்ஸ்பாட்டை ஷேர் செய்ய டிக்கெட் எடுக்கப்பட்டது. பின் இருவரும் தனித்தனியாக பிரிந்துவிட்டனர்.
சிறிது நேரத்தில் ஹாட்ஸ்பாட் கொடுத்து உதவி செய்த பெண்ணுக்கு Aadhaar authentication முயற்சிகள் தோல்வியடைந்ததாக குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது. பின் ஹாட்ஸ்பாட்டை ஆஃப் செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு, ஆதார் இணையத்தில் தரவுகளை சரிபார்த்துள்ளார். பின் தனது செல்பேசியில் இருக்கும் வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றியுள்ளார். இதை அந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்.
நம் கண் முன் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டு, நாம் செய்யும் உதவியின் வழியே நமக்கு ஆப்படிக்கும் நிகழ்வுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் ஹாட்ஸ்பாட் கொடுப்பதன் மூலமாக, வேறு ஒரு சாதனத்தின் மூலம் நாம் நமது நெட்வொர்க்கையும் ஐபி முகவரியையும் திருடர்கள் அணுக வழிவகுக்கிறோம். குறிப்பாக நெட்வொர்க்கை கொடுக்கும்பட்சத்தில், ஹாட்ஸ்பாட் வாங்கியவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், உங்கள் பெயரிலேயே அது கணக்கு வைக்கப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் IP address மூலம் நடக்கும் எல்லா இணைய செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு நடந்தால், முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது IP addressன் உரிமையாளரான உங்களைத்தான்.
இதற்கு, உதாரணங்களும் இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு மும்பையில், ஒரு ஆன்லைன் மோசடி சம்பவம் நடந்திருக்கிறது. அந்த IP address கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவரது ஹாட்ஸ்பாட்டை வேறொரு நபர் உபயோகித்தபோது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஹாட்ஸ்பாட் வழியாக நமது இணைய செயல்பாடுகளை வேறொருவர் கண்காணிக்க முடியும். உங்கள் அனுமதி இல்லாமலேயே உங்கள் கணக்குகளில் உள்நுழைய முயற்சி செய்ய முடியும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
ஹாட்ஸ்பாட் வழியே ஹேக்கிங் நடப்பது அரிது என சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஹேக்கிங் எளிதல்ல என்றும், சில ஆயிரம் மற்றும் சில லட்சம் தொகைகளுக்காக இந்த ஹேக்கிங் நடக்காது என்றும் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.