சிறந்த ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பணிச் சூழலைக் கோரி, ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தெலங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய ஆப்-அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
டிசம்பர் 25 அன்று நடந்த போராட்டத்திற்குப் பிறகும், குறைக்கப்பட்ட ஊதியத்தை நிறுவனங்கள் மாற்றியமைக்காததாலும், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததாலும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தால் ஜொமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட் , இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தேடல் அதிகமாக இருக்கும் என்பதால், டெலிவரி ஊழியர்களைப் பணியில் வைத்திருக்க நிறுவனங்கள் கூடுதல் ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளன. அதில் புத்தாண்டு மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒரு ஆர்டருக்கு ₹120 முதல் ₹150 வரை ஊதியம் வழங்குகிறது. நாள் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ₹3,000 வரை ஈட்ட வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆர்டர்களை ஏற்க மறுப்பதற்கும், ரத்து செய்வதற்கும் விதிக்கப்படும் அபராதத் தொகையைத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
ஸ்விக்கி தரப்பில் இருந்து டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ₹10,000 வரை ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 6 மணி நேரப் பணிக்கு ₹2,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நிறுவனங்களின் தரப்பில், இது போன்ற பண்டிகைக் காலங்களில் அதிக ஊக்கத்தொகை வழங்குவது வழக்கமான ஒன்றுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.