இந்தியா

முதல் நிதியாண்டிலேயே இத்தனை கோடிகள் நஷ்டமா!.. ஜெப்டோ நிறுவனத்தின் தொடக்கம் எப்படி?

JustinDurai

முதல் நிதியாண்டிலேயே ஜெப்டோ நிறுவனம் ரூ.390.4 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜெப்டோ (Zepto), மளிகைப் பொருள்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யும் ஓர் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும். இளம் தொழில்முனைவோர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகிய இருவரும் இந்த நிறுவனத்தை கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கினார்கள். இந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் தான் அந்த நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆனால், ஆரம்பித்த ஆறே மாதங்களுக்குள் இந்த நிறுவனம் மிகவும் பிரபலம் அடைந்ததுடன், நிறுவனத்தைத் தொடங்கிய இந்த இருவரையும் பெரும் பணக்காரர்களாகவும் உயர்த்தியது.

குறுகியக் காலத்தில் ஜெப்டோ அடைந்த இந்த பிரபலத்துக்குக் காரணம், 10 நிமிடங்களில் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யத் தொடங்கியதுதான். இந்த நிறுவனம் சுமார் 10 நகரங்களில் 86-க்கும் மேற்பட்ட மொத்த வணிகக் கடை உரிமையாளர்களுடன் இணைந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான டெலிவரிகளை வெற்றிகரமாகச் செய்தது. கிளவுட் ஷாப் மற்றும் மைக்ரோ வேர்ஹவுஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, மளிகைப் பொருள்களை விரைவாக டெலிவரி செய்யும் நேரத்தை 10 நிமிடங்களுக்குக் குறைத்தது.

இந்நிலையில் 2022ம் நிதியாண்டில் ஜெப்டோ நிறுவனம் ரூ.390.4 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் செயல்பாடுகளின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.142.4 கோடி. இந்த நிதி ஆண்டில் ஜெப்டோ நிறுவனம், பங்குகளை வாங்குவதற்காகவும், விளம்பரத்திற்காகவும், ஊழியர் நலனுக்காகவும் 532.7 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில், ரூ.142.4 கோடி மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறது. நிறுவனம் தொடங்கிய முதல் நிதியாண்டிலேயே ஜெப்டோ நிறுவனம் ரூ.390.4 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.