இந்தியா

அப்பாவி இளைஞர் சுட்டுக்கொலை: டார்ஜிலிங்கில் மீண்டும் பதற்றம்

webteam

டார்ஜிலிங்-ல் போராட்டத்தின் போது அப்பாவி இளைஞரை போலீசார் சுட்டு கொன்றதாகக் கூறி, இளைஞரின் சடலத்தை எடுத்துக்கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக (கூர்க்காலாந்து) அறிவிக்க வேண்டும் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், டார்ஜிலிங் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங்கில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொனாடா பகுதியில் இளைஞர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. யஷி புடியா என்ற அந்த இளைஞர் கடையில் மருந்து வாங்கிக் கொண்டு சென்ற போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இளைஞரின் சடலத்தை எடுத்துக் கொண்டு மக்கள் பேரணியாக சென்றனர். சோனாடா போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தினர். அப்பாவி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதனால் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும் கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி அமைப்பைச் சார்ந்த நீரஜ் ஜிம்பா கூறினார். இதனையடுத்து, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.