மாதிரிப் படம்
மாதிரிப் படம் ட்விட்டர்
இந்தியா

தொடரும் சோகம்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த ஒடிசா இளைஞர்!

Prakash J

சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனாத்ரி பகுதியைச் சேர்ந்தவர் பிகாஷ் கர் (28). இவர், அங்குள்ள மைதானம் ஒன்றில், நேற்று சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராவிதமாகக் கீழே விழுந்துள்ளார். இதனால், அவருடன் விளையாடியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். அவருடைய மரணத்திற்கான பின்னணி பற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தபிறகே, அவருடைய மரணம் குறித்து முழுத் தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி, இதேபோன்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ இணைத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.