நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும் கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ராஜஸ்தானில் இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர், சச்சின் கரு (27). கடந்த மார்ச் 1ஆம் தேதி அவர், அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கிச் சென்றார். ஹோட்டல் ஊழியர், அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சச்சின் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.