இந்தியா

“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி

“மோடியை போய் கேளுங்கள்” - கர்நாடக முதல்வர் அடாவடி

webteam

“நீங்கள் மோடிக்கு தானே வாக்களித்தீர்கள், அவரிடம் போய் கேளுங்கள்” என்று போராடிய மக்களை பார்த்து கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி கிராமங்களில் தங்கி, அங்கு இருக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் அவர் ராய்ச்சூர் கிராமத்திற்கு தங்க சென்றுகொண்டிருந்தார். இதற்காக இவர் கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது காரேகுடே கிராம மக்கள் வழியில் திரண்டிருந்தனர். அவர்கள் ‘துங்கபத்ரா வலாயா ஹங்காமி கர்மிகாரா சங்கா’ தங்க சுரங்கத்தில் சரியாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை தெரிவிக்க கூடியிருந்தனர். அத்துடன் கர்நாடக அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து, “நீங்கள் கலைந்து செல்கிறீர்களா அல்லது காவல்துறையினரை வைத்து லத்தியால் அடிக்க சொல்லவா. நீங்கள் மோடிக்கு தான் வாக்களித்தீர்கள். எனவே அவரிடம் போய் இதுகுறித்து கேளுங்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை” எனத் தெரிவித்தார். 

இதற்கு பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி, “நீங்கள் கர்நாடக மக்களின் குறைகளை கேட்கவில்லை என்றால் எதற்காக கர்நாடக முதல்வராக இருக்கிறீர்கள்? என்ன இருந்தாலும் கர்நாடக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே நீங்கள் விரைவாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி கர்நாடக மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நீங்கள் எதற்கும் சரிப்பட்டுவர மாட்டீர்கள்” எனக் கூறியுள்ளார்.