மே தினத்திற்கு விடுமுறை அளிக்க நீங்கள் எல்லாம் என்ன தொழிலாளர்களா என அரசு ஊழியர்களிடம் திரிபுரா முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை திரிபுரா அரசு அண்மையில் வெளியிட்டது. அதில் மே1ம் தேதி விடுமுறை தினத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. அதாவது கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை தினங்கள் என்ற பட்டியலில் மே1ம் தேதி இடம்பிடித்துள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மே 1ம் தேதி நீக்கம் குறித்து திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அரசு ஊழியர்களுக்கு மே1ம் தேதி விடுமுறை தேவையில்லை. அவர்கள் எல்லாம் அரசுப் பணியாளர்கள். தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகள் இல்லை. நான் என்ன ஊழியனா? நான் முதலமைச்சர். நீங்கள் எல்லாம் தொழிற்சாலையிலா வேலை பார்க்குறீர்கள்? அரசு கோப்புகளை கையாளும் நீங்கள் பணியாளர்கள். உங்களுக்கு ஏன் விடுமுறை தேவை? விடுமுறை இல்லை என்றால் நீங்கள் ஏன் துயரப்படுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தொழிற்சாலை தொழிலாளிளுக்கு விடுமுறை அளிக்கும் விதத்தில்தான் மே1ம் தேதி கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை
தினங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு இல்லை. உங்களுக்கு விடுமுறை வேண்டுமானால் மே1ம் தேதி எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் யாரெல்லாம் அன்று விடுமுறை எடுக்கிறார்கள் என நாங்கள் நிச்சயம் கவனிப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திரிபுரா கம்யூனிஸ்ட் கட்சியினர் திரிபுரா பாஜக அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.