யோகா பயிற்சி மேற்கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய யோகி ஆதித்யநாத் " இந்திய பாரம்பரியத்தை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதில் யோகா மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. உலகமே உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறது. யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். ஏன், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகூட யோகா செய்வதன் மூலம் வராது" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சீனாவில் 80 ஆயிரத்து 26 பேரை கொரோனா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.