இந்தியா

துப்பாக்கி தூக்குவோருக்கு துப்பாக்கியால் பதிலடி: யோகியின் அதிரடி

webteam

துப்பாக்கி கலாச்சாரத்தை நம்புபவர்களுக்கு அவர்கள் பாணியில்தான் பதில் தர வேண்டியிருக்கும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக போலீஸார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைப்பதும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதும்தான் நோக்கம் என அம்மாநில டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 1,142 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களில் மட்டும் அங்கு 60 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த என்கவுன்டர் கொலைகள் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் ஆதித்யநாத், நாட்டில் அனைவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு அவர்கள் பாணியில் பதிலடி தரப்படும் என்றும், துப்பாக்கி கலாச்சாரத்தை நம்புபவர்களுக்கு துப்பாக்கியால் தாக்கினால் புரியும் என்றும் கூறியுள்ளார்.