அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடையாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக அமைய இருக்கும் ராமர் கோயிலுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் ராமர் கோவிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் பணிகளை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான தனது பங்களிப்பாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இத்தகவலை உத்தரப் பிரதேச மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.