இந்தியா

விருதுகளை பெற்ற ‘யெஸ் வங்கி’ இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம்..!

விருதுகளை பெற்ற ‘யெஸ் வங்கி’ இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம்..!

webteam

வாராக் கடனால் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியிடம் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது யெஸ் வங்கி.

கடந்த 2004-ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்பவர்கள் இணைந்து இந்த வங்கியை உருவாக்கினார்கள். நாளடைவில் வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்த யெஸ் வங்கி, நாடு முழுவதும் கிளைகளை தொடங்கி சிறந்த சேவையை ஆற்றி வந்தது.

2019 ஜூன் வரையில், இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம் மையங்களும் உருவானது. வாடிக்கையாளர்கள் அதிகமாக குவிந்ததால், வங்கி பரிவர்த்தனைகள் பெருகிய அதே வேளையில், கடன்களையும் யெஸ் வங்கி வாரி வழங்கி வந்தது.

இதனையடுத்து யெஸ் வங்கி, யெஸ் கேபிட்டல், யெஸ் அஸெட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என மூன்று விதமான செயல்பாடுகளையும் இந்த நிறுவனம் ஆரம்பித்தது. இதன் மூலம், வர்த்தக வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, கார்ப்பரேட் பைனான்ஸ், சில்லறை வங்கி சேவை போன்றவற்றை யெஸ் வங்கி விசாலப்படுத்தியது.

இந்நிலையில் வங்கியை விரிவுப்படுத்துவதற்காக தைவான் மற்றும் ஜப்பானில் உள்ள ஏடிபி, ஐரோப்பிய முதலீட்டு வங்கி உள்ளிட்ட எட்டு மிகப் பெரிய சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு யெஸ் வங்கி சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனை வாங்கியது.

இதனால் மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை மற்றும் லண்டன் பங்கு சந்தைகளில் யெஸ் வங்கியின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. இந்தச் சூழலில் யெஸ் வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தனது பங்கை விற்பதற்கான கருத்துருவை தயாரித்திருந்த நிலையில், சந்தை நிபந்தனைகளால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. இதன் காரணமாக, அந்த வங்கிக்கு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு யெஸ் வங்கியின் நிலைமை மோசமாக இருந்தாலும், 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் வேகமாக வளரும் வங்கி என்ற விருதை பெற்றது. அதே போல், 2015 ஆம் ஆண்டு லண்டனிலும் விருது பெற்றது. டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கான தர வரிசையிலும் யெஸ் வங்கி முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.