இந்தியா

பிரியங்கா காந்தியின் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிய "யெஸ் வங்கி" ரானா கபூர்?

jagadeesh

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வைத்திருந்த ஓவியத்தை ரூ.2 கோடி கொடுத்து யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர் வாங்கியுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யெஸ் வங்கியின் நிறுவனர் ரானா கபூர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர் மீது கிரிமினல் சதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் இவ்வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ரானா கபூரின் மும்பை அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

இது தவிர ரானா கபூர் தொடர்புள்ள நிதி முறைகேடு சர்ச்சை தொடர்பாக DHFL என்ற நிதி நிறுவனம் மீதும் DOIT URBAN வெஞ்ச்சர்ஸ் நிறுவனம் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரானா கபூரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ரானா கபூர் பத்துக்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி வந்தது குறித்தும் அவர் மேற்கொண்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், விலை உயர்ந்த 44 ஓவியங்களை வாங்கியது குறித்தும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இங்கிலாந்துக்கு செல்லவிருந்த ரானா கபூரின் மகள் ரோஷிணி கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.

விசாரணைக்கு ஆஜராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாராக்கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி அந்நிறுவனத்தின் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.