இந்தியா

யெச்சூரியை தாக்க முயற்சி - 2பேர் கைது

webteam

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் யெச்சூரி கலந்து கொள்ள வந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆவேசமாக முழக்கங்களை எழுப்பியபடி யெச்சூரியை நோக்கி வந்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவரை தாக்க முற்பட்டனர். ஆனால் அருகிலிருந்த காவலர்கள் அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கலவாத அரசியலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நடத்த முடியாது என யெச்சூரியும், இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சி இதுவாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜாவும் கூறியுள்ளார். இச்சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி,ராமகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.