சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா வளர்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காரணமாக கங்கை நதியில் ஆக்சிஜன் அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிப்ரவரியில் எடுத்த அளவைவிட ஜூன் மாத அளவு பெருகியுள்ளது. ஆனால் மாசு ஏற்படுத்துவதில் கழிவுநீர் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக டெல்லியில் கரைபுரளும் யமுனை நதி தூய்மையை சுவாசிக்கத் தொடங்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால், கழிவுகள் கலக்காமல் நதி மெல்ல மறுசீரமைப்பை அடைந்துவருகிறது.
நீரில் கலந்த ஆக்சிஜனின் அளவு யமுனை நதியில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக டாடா ஆய்வு வளர்ச்சி மையத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நதி சுத்தமாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆக்சிஜன் அளவு உயர்ந்துள்ளது நதியில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் செழிக்க உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் முந்தைய ஆய்வுகள் ஊரடங்குக் காலத்தில் நதியின் தரத்தில் முன்னேற்றத்தைக் கண்டறிந்துள்ளன.