தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருப்பதுடன், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் போட்டி நிலவுகிறது. தவிர, ஒவ்வொரு கட்சிகளும் இதர கட்சிகளைக் குறைகூறி வருவதுடன், மறுபக்கம் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், “யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில், இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். டெல்லி சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், அவருடைய இந்தக் குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் பாஜக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாருக்கு இன்று இரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் பதிலளிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சைனி, டெல்லியின் பல்லா கிராமம் அருகே, யமுனை ஆற்றில் இறங்கி அந்த ஆற்று நீரைப் பருகுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர், “நான் ஹரியானா எல்லையில் உள்ள புனித யமுனை தண்ணீரைக் குடித்தேன். டெல்லி முதல்வர் அதிஷி இங்கு வரவில்லை. அவர் ஒரு புதிய பொய்யை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொய்களுக்கு கால்கள் இல்லை. அதனால்தான் அந்தப் பொய்கள் பாஜவுக்கு எதிராக வேலை செய்யவில்லை. கடவுள் போன்ற டெல்லி மக்கள் இந்த ஏமாற்றுக்காரர்களை அங்கீகரித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் வஞ்சக சகாப்தம் பிப்ரவரி 5 ஆம் தேதி முடிவுக்கு வரும். ஹரியானாவின் நன்றிகெட்ட மகன் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தண்டிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, “ஹரியானா அனுப்பும் நீரைத்தான் நான் உட்பட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என டெல்லியின் அனைத்து மக்களும் குடிக்கிறார்கள். மோடியைக் கொல்ல ஹரியானா யமுனையை விஷமாக்கும் என்று எப்படி நினைக்க முடியும்? இது, ஹரியானாவுக்கு மட்டுமான அவமானமில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அவமானம். ஹரியானாவில் இருப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? தங்களின் சொந்த மக்கள் குடிக்கும் நீரை ஹரியானா மக்கள் விஷமாக்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.