இந்தியா

சிம்ம சொப்பனமாக இருந்த முலாயம் சிங் யாதவ்.. பிரதமராக விடாமல் ஓரங்கட்டப்பட்டது எப்படி?

சங்கீதா

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மூத்த அரசியல் தலைவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான இவர், மிகவும் கவலைக்கிடமான நிலையில், உயிர் காக்கும் மருந்துகள் உதவியுடன் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முலாயம் சிங் யாதவ் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், 82 வயதான முலாயம் சிங் யாதவ், அரசியலில் எவ்வாறு வேரூன்றி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் என்பது குறித்து இங்கு சிறுத் தொகுப்பாக காணலாம்.

1. உத்தரப் பிரதேச மாநிலம் எடவாஹ் மாவட்டம் சைஃபை (Saifai) கிராமத்தில் 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சுஹர் சிங் யாதவ் மற்றும் முர்தி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். ஷிவ்பால் சிங் யாதவ், ராஜ்பால் சிங் யாதவ், ரத்தன் சிங் யாதவ், அபய் ராம் யாதவ் என 4 சகோதர்கள் மற்றும் கம்லா தேவி என்ற சகோதரியுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்த இவர், மல்யுத்த போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.

2. அரசியல் அறிவியலில் (Political Science) இளங்கலை (B.A.), முதுகலை (M.A.) மற்றும் இளங்கலை ஆசிரியர் பட்டமும் (Bachelor of Teaching) பெற்றவர். இவருக்கு மால்டி தேவி, சாதனா குப்தா என்ற இருமனைவிகள் இருந்தனர். இதில் முலாயம் சிங் யாதவ் - மால்டி தேவி தம்பதிக்கு பிறந்தவர் தான் அகிலேஷ் யாதவ். இரண்டாவது மனைவியான சாதனா குப்தா ஏற்கனவே சந்திரா பிரகாஷ் குப்தா என்பவரை திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர். சாதனா குப்தா - சந்திரா பிரகாஷ் குப்தாவின் மகன் தான் பிரதீக் யாதவ்.

3. 1960-களில் மல்யுத்த வீரராக, ஆசிரியராக, சமூக ஆர்வலராக முதலில் அரசியலில் நுழைந்தவர் தான் முலாயம் சிங் யாதவ். அதாவது முலாயம் சிங் யாதவின் அரசியல் பிரவேசம் ஒரு மல்யுத்தப் போட்டியில்தான் உருவானது. ஜஸ்வந்த்நகர் எம்.எல்.ஏவான நாது சிங் தலைமையில் மெயின்புரியில் மல்யுத்தப் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மல்யுத்த வீரரான முலாயம் சிங்கின் திறமையைக் கண்டு கவரப்பட்ட நாது சிங், அரசியலில் தனது ஆதரவாளராக சேர்த்துக் கொண்டார்.

4. அதுமட்டுமின்றி ராம் மனோகர் லோகியா, ராஜ் நரைன், சௌத்ரி சரண் சிங் போன்றவர்களின் அரசியல் களத்தில் வளர்ந்த முலாயம் சிங் யாதவ், 1967-ம் ஆண்டு சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

5. 28 வயதில் வேட்பாளராக நின்று முதல் வாய்ப்பிலேயே உத்தரப்பிரதேசத்தின் எம்.எல்.ஏ. ஆக தேர்வானவர்தான் முலாயம் சிங் யாதவ். அதன்பிறகு கட்சிகள் பிளவுப்பட முயலாயம் சிங் யாதவும் பாரதிய லோக் தள், ஜனதா, பாரதிய கிராந்தி தள், ஜனதா தள் என பல்வேறு கட்சிகளில் பணி புரிந்தார்.

6. 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் முலாயம்சிங் யாதவும் ஒருவர். இந்திராவின் எமர்ஜென்சி எனப்படும் மிசா சிறைவாசத்தை 19 மாதங்கள் அனுபவித்தார் முலாயம்சிங்.

7 .உ.பி சட்டசபைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அம்மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். 1989 முதல் 1991-ம் ஆண்டு வரை, பின்னர் 1993 முதல் 1995-ம் ஆண்டு வரை, பிறகு 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 1996 முதல் 1998-ம் ஆண்டு வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

8.இதில் ஜஸ்வந்த்நகரில் இருந்து மட்டும் 7 முறை உ.பி. சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் நாடாளுமன்றத்திற்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் மெயின்புரியில் இருந்து மட்டும் 1996, 2004, 2009, 2014, 2019 என 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக முலாயம் சிங் யாதவ் உள்ளார்.

9. கடந்த 1992-ம் ஆண்டு சமாஜ்வாடி என்ற கட்சியை முலாயம் சிங் யாதவ் நிறுவினார். பின்னாளில் இந்தக் கட்சி மாநிலக் கட்சிகளில் அசைக்க முடியாத கட்சியாக குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருவெடுத்தது.

10. 1996-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி ஆட்சி அமைக்க இருந்தபோது, முலாயம் சிங் யாதவின் பெயரைத்தான் பிரதமர் பதவிக்கு மூத்த தலைவர் முன்மொழிந்திருந்தார். ஆனால் அப்போது பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் எதிர்த்ததால், அவரால் பிரதமர் ஆக முடியாமல் போயிற்று.

12. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின் மூலம் இஸ்லாமியர்களுகிடையே முலாயம் சிங் யாதவ் பரிச்சயமான, அதேநேரத்தில் தவிர்க்க முடியாத சக்கியாக தனது திறமையின் மூலம் உருவெடுத்தவர். குறிப்பாக தனது சைக்கிள் பேரணி வாயிலாக மாநிலத்தில் தனது ஆதரவாளர்களால் நேதாஜி என்று அன்பாக அழைக்கப்பட்டவர்.

13. தான் அரசியலில் இருந்தபோது தனது மகன் அகிலேஷ் யாதவை அரசியலுக்கு கொண்டு வந்து உ.பி. முதல்வராக்கினார். பின்னர், ஆரம்பகாலத்திலிருந்தே தனக்கு மிகவும் ஆதரவாக இருந்த சகோதரர் ஷிவ்பால் யாதவ் மற்றும் மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரால் கட்சியில் யாருக்கு அதிகாரம் என்ற பூசல்களால் கட்சி சிதையும் நிலையில் இருந்தபோது மகனுக்கு ஆதரவாக இருந்தார் முலாயம் சிங்.

14. எனினும், தனது மகனால் பின்னர் ஓரங்கட்டப்பட்டார் முலாயம் சிங் யாதவ். 2016-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின் போது பிரணாப் முகர்ஜிக்கு அடுத்ததாக முலாயம்சிங் யாதவ் அந்தப் பதவிக்கு வருவார் என கணிக்கப்பட்ட நிலையில், அப்படி எதும் நடக்கவில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் பாஜகவுக்கு சிம்மசொப்பனாக விளங்கிய முலாயம் சிங் யாதவ், 2012-ம் ஆண்டு நிர்பயா வழக்கு மற்றும் சுதந்திர திபெத் ஆகியவற்றில் கூறிய கருத்து சர்ச்சைக்கு வித்திட்டது.

15. முலாயம் சிங் யாதவின் உறவினர் ராம்கோபால் யாதவ், சகோதரர் ஷிவ்பால் யாதவ், மகன் அகிலேஷ் யாதவ், சகோதர்களின் மகன்களான தர்மேந்திர யாதவ், அக்ஷய யாதவ், மருமகள் டிம்பிள் யாதவ் மற்றும் சகோதரரின் மகனின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் அரசியலில் உள்ளனர்.