கடந்த ஆண்டு கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உலக வங்கி 250 மில்லியன் டாலர்களை கடன் அளித்துள்ளது.
2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கேரள மாநிலம் கனமழையை சந்தித்தது. இந்தக் கனமழையால் சாலை மற்றும் வீடுகளை வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் கேரள மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மறுபடியும் கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப பல நாட்களானது. மேலும் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கேரளா அரசு ‘ரீ பில்ட் கேரளா’ என்ற திட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில் கேரள அரசுக்கு உலக வங்கி 250 மில்லியன் டாலர்களை (1725 கோடி ரூபாய்) கடனாக அளித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடிய விரைவில் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.
இந்தத் தொகையில் 160 மில்லியன் டாலர் பணம் உலக வங்கி வளர்ந்து வரும் நாடுகளுக்கு அளித்து வரும் ‘சர்வேதச வளர்ச்சிக்கான உதவி’ ஆக தரவுள்ளது. இந்தத் தொகைக்கு வட்டி 1 முதல் 1.5 சதவிகிதமாக இருக்கும்.
இதுகுறித்து கேரள மாநிலத்தில் ‘ரீபில்ட் கேரளா’ என்ற திட்ட பணிகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 39ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அம்மாநிலம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.