இந்தியா

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் - மும்முரமாகும் வேலைகள்

Sinekadhara

இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறக்க வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.

புதிய நாடாளுமன்றம் உள்ளிட்டவை அடங்கிய சென்ரல் விஸ்தா திட்டங்கள் ரூ.20000 கோடி செலவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையால் டெல்லியில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இருக்கக்கூடிய பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகிலேயே மிக பிரம்மாண்டமான முறையில் 971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 24,000 சதுரமீட்டர் பரப்பளவு உடையது. அதாவது தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்தை விட 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரிதாக அமைய உள்ளது.

எவ்வளவு நில அதிர்வு ஏற்பட்டாலும் அதனை தாங்கும் வகையிலும் மக்களவை மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் என 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமரும் வகையில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட உள்ளது. டெல்லியில் எந்த ஒரு புதிய அரசு கட்டடமும் இந்தியா கேட்டை விட உயரமாக இருக்கக்கூடாது என்பதால் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. டாட்டா குழுமம் இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்ட HPC என்னும் வடிவமைப்பு நிறுவனம் இந்த நாடாளுமன்றம் புதிய கட்டடத்திற்கான வடிவமைப்பை செய்து கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தூண்கள், சுவர்கள் உள்ளிட்டவற்றின் இந்தியாவின் கலாசாரம், புராதான கலை மற்றும் கட்டுமான நுணுக்கங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. அமைய உள்ள இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மிகப்பெரிய அரசியல் சாசன காட்சியகம் ஒன்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் காகிதங்கள் குறைபாடு இல்லாத அளவிற்கு முழுமையாக டிஜிட்டல் மயமாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்திய அரசியல் சாசன புத்தகத்தின் உண்மையான முதல் பதிப்பு நாடாளுமன்ற கட்டடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின்சாரம் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்படி பார்த்து பார்த்து அமைக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் பொழுது நிறைவடைந்து இருக்கும் என்றும், அதன் பிறகு வரக்கூடிய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் நடத்தப்படும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வு நடத்திவரும் மத்திய அரசு, வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிட ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் திட்டமிட்டப்படி பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான வரும் நவம்பர் 26 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டு, வரும் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் சென்று, பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது புதிய நாடாளுமன்ற கட்டடம்.

- நிரஞ்சன் குமார