இந்தியா

’வொர்க் ஃப்ரம் ஹோம்’ செய்தால் செலவு குறைவு என நினைத்தீர்களா?: கூடுதல் வரி விதிக்க வாய்ப்பு

Sinekadhara

கொரோனா சமூக பரவலால் வீட்டிலிர்ந்தே வேலை செய்வது(WFH) நிறைய செலவுகளை மிச்சப்படுத்தி இருக்கிறது என ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். ஆனால் இதன் காரணமாக ஆண்டு வரி உயரக்கூடும் என்பது பலருக்கும் தெரியாது.

போக்குவரத்து செலவு, வீட்டு வாடகை செலவு, விடுமுறை செலவு போன்றவை வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கத் தேவையில்லை. எனவே இவைகளுக்கு வரி விதிக்கப்படலாம் என வரி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்கள் தினசரி அலுவலகத்திற்கு வருவதில்லை என்பதால், போக்குவரத்து செலவுக்கு வரி விலக்கு கொடுக்கமுடியாது. அதே சமயம் அதை திருப்பி செலுத்துவதாக இருந்தால், உண்மையில் என்ன செலவு ஆனது என்பதற்கான ஆதாரங்களை வழங்கும்போது வரிவிலக்கு அளிக்கப்படலாம். வேலை சம்பந்தமான போக்குவரத்து இல்லாத நிலையில் வரி விதிக்கப்படலாம்.

அதேபோல், தொற்றுநோயை கருத்தில்கொண்டு, நடப்பு நிதியாண்டில், விடுமுறை எடுத்துவிட்டு விடுப்பு போக்குவரத்து செலவு(LTA) கேட்கமுடியாது. எனவே இதுவும் வரியாக விதிக்கப்படலாம். இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால், நான்கு ஆண்டுகளில் LTAவை இரண்டு முறை கோரலாம்.

மேலும் பல நிறுவனங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளது. அதில் இண்டெர்நெட் பில், மின்கட்டணம், லேப்டாப் வாங்கும் செலவு மற்றும் வேலை செய்ய ஃபர்னிச்சர் வாங்கும் செலவு ஆகியவை அடங்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் அந்த தொகை ஊழியர்களுக்கு வரியாக விதிக்கப்படும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கைப்படி, வரி மற்றும் மனிதவள வல்லுநர்கள் சம்பளத்தை மறுசீரமைப்பதன் மூலம், ஊழியர்களுக்கு ஏற்படும் வரி பாதிப்பை குறைக்கலாம் என்கின்றனர். பல்வேறு நிறுவனங்களின் மனிதவள துறைகளிடமிருந்து தங்கள் ஊழியர்களின் வரிச்சுமையை குறைக்க எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை நாடிவருவதாக க்ளியர்டேக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்க்கிட் குப்தா தெரிவித்துள்ளார்.

வரிச் சட்டங்களில் கட்டமைப்பு மாற்றம் இல்லாமல் சம்பளக் கூறுகளை மறுசீரமைப்பது இந்த கட்டத்தில் உதவாது. இப்போதைக்கு நிறுவனங்கள் திருப்பி செலுத்தும் வகையில் WFH செலவை வழங்கி வருகின்றன என்று ரண்ட்ஸ்டாட் இந்தியாவின் தலைமை மக்கள் அதிகாரி அஞ்சலி ரகுவன்ஷி கூறியுள்ளார்.