இந்தியா

''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..!

''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..!

Rasus

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப‌ற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை கோரும் தீர்மான‌த்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வர உள்ளார். தற்போதைய நிலையில் 224 பேர் கொண்ட கர்நாடக பேரவையில் ஆளும் கூட்டணியின் பலம் 117 ஆகவும் பாஜக மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எ‌ம்எல்ஏக்களின் பலம் 107 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.  ராஜினாமா முடிவில் தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியை சே‌ர்ந்த 15 எம்எல்ஏக்கள் பங்கேற்காத சூழலில், அதன் பலம் 102 ஆக குறைந்து விடும். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் தனது முடிவை குறித்த கால வரையறைக்குள் எடுக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதேபோல ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் கலந்து கொள்ளவோ, தவிர்க்கவோ அவர்களை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, வரவேற்பதாக மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.