இந்தியா

சபரிமலை சன்னிதானம் செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு

Rasus

கோழிக்கோட்டிலிருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல முயன்ற இரண்டு பெண்கள் ஆண் பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு இளம் பெண்கள் சபரிமலை சன்னிதானம் செல்வதற்காக பம்பை சென்றனர். காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை கோயில் அருகே உள்ள கணபதி கோயிலுக்கு சென்ற அவர்களுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பின்னர் இரு பெண்களும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் சந்திரா நந்தன் பாதை வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே இரண்டு பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றால் கோயில் நடை அடைக்கப்படும் என பந்தள அரண்மனை பிரதிநிதிகள் எச்சரித்தனர். அந்த இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆண் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு பெண்களும் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்று சபரிமலைக்கு செல்ல முயன்ற தமிழக பெண்கள் 11 பேர், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீண்டும் மதுரைக்கே திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.