orgon donation  PT WEB
இந்தியா

உடல் உறுப்பு தானம்.. ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகளவு விருப்பம்!

இந்தியாவில் மரணத்திற்கு பிறகு தங்களது உறுப்புகளை தானம் செய்ய ஆண்களை விட பெண்கள் அதிகளவு விருப்பம் தெரிவித்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

PT WEB

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 18,900 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்வதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவு விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தில் உள்ளது.

மரணித்த பிறகும் இந்த மண்ணில் தொடர்ந்து வாழ முடியும் என்றால் அது தங்களது உறுப்புகளை பிறருக்கு தனமாக அளிப்பதன் மூலம் தான். 2024 ஆம் ஆண்டு NOTTO (NATIONAL ORGAN AND TISSUE TRANSPLANT ORGANISATION) வருடாந்திர அறிக்கையில் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் 18,900 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. உலகளவில் இந்தியா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளது.

ORGAN DONATION

இந்த மைல் கல்லை இந்தியா எட்ட, தங்களது உறுப்புகளை தனமாக அளித்தவர்களின் உன்னத சேவையால் மட்டுமே சாத்தியமானது. இந்திய அளவில் தமிழ்நாடு உறுப்பு தானம் செய்வது மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானமாக வழங்குபவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு NOTTO ஆன்லைன் வலைதளம் தொடங்கிய பிறகு 3.30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பிற்கு பிறகு தங்களது உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

NOTTO என்பது இந்திய அளவில் உறுப்பு தானம் மற்றும் சிகிச்சைகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட வலைதளம். உறுப்புகளை தானம் செய்வதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவு விருப்பம் தெரிவித்துள்ளதாக தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்த தரவுகள் 2024ஆம் ஆண்டில் ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பித்தவர்களின் தரவுகள் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.

NOTTO

ஓட்டுநர் உரிமம் கோரும் விண்ணப்பத்தில் இறப்பிற்கு பிறகு தங்களது உடல் உறுப்புகளை அல்லது திசுக்களை பிறருக்கு தானம் செய்திட விருப்பமா என்ற கேள்விக்கு ஆண்களை காட்டிலும் பெண்களே பெருமளவு ஆம் என விருப்பம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் உறுப்பு தானம் செய்திட பெண்கள் 17% முதல் 21% விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஆண்கள் 12% முதல் 19% பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ராஜ்குமார் . ர