உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அத்தியாவசிய பொருள்களை பெற நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்றுக் கொண்டிருந்த பெண்களை போலீஸ் ஒருவர் லத்தியால் தாக்கினார். இதுகுறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 4,057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 95 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கும், தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும் அந்தந்த மாநில அரசு நிவாரணத்தொகையும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருள்களை பெற நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்றுக் கொண்டிருந்த பெண்களை போலீஸ் ஒருவர் லத்தியால் தாக்கினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு வெள்ளை சட்டை அணிந்திருக்கும் நபர் ஒருவர் போலீஸிடம் சில பெண்களை குறிப்பிட்டு காண்பிக்கிறார். அந்தப் பெண்களை எல்லாம் போலீஸ்காரர் லத்தியால் தாக்குகிறார். பின்னர் அவர் ஒரு பெண்ணை வரிசையில் இருந்து வெளியே இழுத்து வெளியேறச் செய்கிறார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ரேஷன் பொருட்கள் வாங்க வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் மாலை 4 மணி அல்லது 11 மணி நேரம் கழித்துக் கூட அவர்கள் திரும்பி வரவில்லை. ரேஷன் பொருள்கள் கொடுப்பவர்கள் முதலில் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கே ரேஷன் பொருட்களை தேர்வு செய்து கொடுத்தனர்” எனத் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சுராப் சர்மா விசாரணைக்கு பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என நொய்டா போலீஸ் ட்வீட் செய்துள்ளது.