இந்தியா

பெற்ற மகனை காப்பாற்ற புலியிடம் மல்லுக்கட்டிய இளம் தாய்.. ம.பி. அருகே நடந்த நெகிழ்ச்சி!

JananiGovindhan

தன்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்காக ஒரு தாய் எந்த எல்லையையும் தாண்டுவார் என்ற வசனங்கள் பலவும் சினிமாக்கள் மூலம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே ஈன்றெடுத்த மகனது உயிரை காப்பாற்ற இளம் தாய் ஒருவர் புலியிடம் முட்டி மோதியிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்த்வர்க் புலிகள் காப்பகத்திற்கு அருகே நேற்று (செப்.,06) இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ரொஹானிய கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சவுத்ரி என்ற அந்த பெண் தன்னுடைய 15 மாத ஆண் குழந்தை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதிக்கு வந்த புலி ஒன்று குழந்தையை கவ்வியிருக்கிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா புலியின் வசமிருந்த மகனை காப்பாற்ற வேண்டி முயற்சித்திருக்கிறார். அதன்படி கூச்சலிட்டு கிராமத்தில் இருந்தவர்களின் உதவியை நாடியிருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், புலியை விரட்டுவதற்காக கூட்டமாக கூடியதால் குழந்தையை கீழே போட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியிருக்கிறது.

புலியிடமிருந்து குழந்தையை மீட்பதற்காக அதனுடன் போரடியதில் அர்ச்சன சவுத்ரிக்கு இடுப்பு, கை, முதுகு ஆகிய பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், குழந்தைக்கு தலை மற்றும் முதுகில் காயம் உள்ளதாகவும் அவரது கணவர் தெரிவித்திருக்கிறார்.

விஷயம் அறிந்து வந்த வனத்துறை காப்பாளர் ராம் சிங் மார்கோ உள்ளிட்டோர் தாய் மகனை மீட்டு மன்புரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுபோக, தப்பியோடிய புலி குடியிருப்பு பகுதி அருகே எங்காவது உலாவுகிறதா என்பதையும் கண்காணித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள உமரியா மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா புலியால் பாதிக்கப்பட்ட தாய் மகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்கால ஜபல்புரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ரொஹானிய கிராம மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.