ஒரு பெண் தன்னுடைய முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாவிட்டாலும் இரண்டாம் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாவது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி பெண் தொடர்ந்திருந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2005இல் அந்தப் பெண் தன்னுடைய முதல் கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்துப் பெறாமல் வேறொருவரை திருமணம் செய்திருக்கிறார்.
பின்னர் இரண்டாவது கணவரிடமிருந்து பிரிந்தார். இரண்டாவது கணவர் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஹைதராபாத் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. மேல் முறையீட்டில் தெலங்கானா உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்திருந்தது, இதனால் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது.
அந்தப் பெண் முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை என்பதால் தனக்கும் அவருக்குமான திருமணம் சட்டப்படி செல்லாது எனவும், தன்னிடம் அவர் ஜீவனாம்சம் கோர முடியாது என்றும் இரண்டாவது கணவர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டாவது கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.