இந்தியா

லைசென்ஸும் இல்ல.. LLRம் இல்ல.. வேகமாக க்ளட்சை மிதித்து டெலிவரி பாயை கார் ஏற்றிக்கொன்ற பெண்

JananiGovindhan

இரவுப் பகல், வெயில், மழை என எந்த சூழலையும் பாராமல் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் டெலிவரி ஊழியர்கள். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கஸ்டமர்கள் வாயிலாக சந்திக்கும் இடர்பாடுகள் பலவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

இப்படி இருக்கையில், கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்த 40 வயதான பெண் ஒருவர் பிரேக் போடுவதற்கு பதிலாக க்ளட்சை வேகமாக அழுத்தியதன் காரணமாக 19 வயதான டெலிவரி ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அரங்கேறியிருக்கிறது.

தானேவின் ஹிராநந்தனி எஸ்டேட் என்ற பகுதியில் சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 1.30 மணியளவில் அஜய் தோகனே என்ற வாலிபர் மீதுதான் 40 வயதான அப்பெண் காரை ஏற்றியிருக்கிறார். விபத்து நடந்ததும் காயமுற்ற அஜய்யை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது அனுமதிப்பதற்கு முன்பே அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே விபத்து ஏற்படுத்திய அப்பெண் சம்பவம் நடந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பியோடியிருக்கிறார். இந்த நிலையில், ஹிராநந்தனி ஃபவுண்டேஷன் பள்ளியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் நடந்த சம்பவம் அனைத்தும் பதிவாகியிருந்திருக்கிறது.

அதன்படி, ஓட்டுநர் உரிமம் எதுவும் இல்லாமல் கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்த அந்த பெண், பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் போது பிரேக் போடுவதற்கு பதிலாக க்ளட்சை வேகமாக அழுத்தியதால் பின்னால் வந்த டெலிவரி பாய் அஜய் மீது காரால் மோதியிருக்கிறார். இதில் தலை மற்றும் மூக்குப் பகுதியில் பலத்த காயமுற்றிருந்திருக்கிறார் அஜய்.

விபத்து ஏற்படுத்திய பெண் ஹிராநந்தனி எஸ்டேட்டில் உள்ள ரோடாஸ் என்க்ளேவ் வுட் பார்க்கில் குடியிருப்பவர் என்று அப்பகுதி மக்கள் கூறியிருக்கிறார்கள். கார் மோதியதால் உயிரிழந்த அஜயின் தந்தை குடிக்கு அடிமையானதாலேயே இந்த வேலைக்கு வந்தார் என்றும், டெலிவரி வேலையை முடித்துவிட்டு கடைக்கு திரும்பும் போதே இப்படி நடந்திருக்கிறது எனவும் ஷாப் ஓனர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் டெலிவரி பாய் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்ற அப்பெண் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமின் மனுவை பெற்று தனது வழக்கறிஞருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள காசர்வாதவலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாப்ஷெட்டி, “சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். ஜாமின் பெறக்கூடிய குற்றமாக இருப்பதால் காரை ஓட்டி வந்த அந்த பெண்ணை இன்னும் கைது செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.