பவன் சாஹூ x
இந்தியா

ஆம்புலன்ஸ் இல்லை.. தள்ளு வண்டியில் மனைவியைச் சுமந்த கணவன் - பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட மனைவியை தள்ளுவண்டியில் சுமந்து அவரது கணவர் மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 25, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கணவர் ஒருவர் தனது மனைவியைக் கையால் தள்ளும் காய்கறி வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும், காலதாமதம் காரணமாக அந்தப் பெண் வழியிலேயே உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பவன் சாஹூ

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்திலுள்ள கேசாய் கிராமத்தைச் சார்ந்தவர் பவன் சாஹூ. இவர், 12 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர், அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக பவனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், கடந்த சனிக்கிழமை அவரது மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பவன் சாஹூ தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸை அழைக்குமாறு அண்டை வீட்டாரிடம் உதவி கேட்டுள்ளார்.

யாரும் உதவிக்கு வராத நிலையிலும், பணம் கொடுத்து வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தாலும், மருத்துவமனை நோக்கி காய்கறி விற்கும் தனது தள்ளுவண்டியிலேயே தனது மனைவியைச் சென்றுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்றபோது, உரிய நேரத்தில் மருத்துமனைக்கு அழைத்து வரப்படாததால் ஏற்கெனவே, அப்பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமையின் காரணமாக உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு தனது கணவர் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பவன் சஹூ

இந்நிலையில், இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ஆளும் பாஜக அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், இது பாஜகவின் கொலைகார அமைப்பு என்றும், ஏழை ஒருவருக்கு ஆம்புலன்ஸ் கூட வழங்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளதாகவும் சாடியுள்ளது. மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாததால், அந்தப் பெண் உயிரிழந்தார்.

இது அமைப்பின் தோல்வி மட்டுமல்ல, மக்களின் உயிரைப் பறிக்கும் செயல். இதற்குப் பொறுப்பேற்க யாரும் இல்லை என்றும், இது திறமையற்ற மற்றும் வெட்கமற்ற பாஜக அரசு என்றும் காங்கிரஸ் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது. சுகாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.