இந்தியா

பெண்களும் முத்தலாக் சொல்லலாம்: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

Rasus

ஆண்களை போலவே பெண்களும் முத்தலாக்கை பயன்படுத்தி தங்களுடைய கணவனை விவாகரத்து செய்யலாம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது

இஸ்லாம் மதத்தை பொருத்தவரை திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம், அதில் பெண்களும் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைக்கலாம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. “திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நான்கு தேர்வுகள் உண்டு. இதன்படி, அந்த பெண் 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதையும் அந்த பெண் தேர்ந்தெடுக்கலாம்.” என்றும் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் எந்த மதத்தை அல்லது சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்தவித தடையும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம்.

“நிக்கானாமா எனப்படும் திருமண ஒப்பந்தத்தில் இஸ்லாம் சட்டத்திற்கு உட்பட்ட மாற்றங்களை அந்த பெண் கொண்டு வரலாம். அதேபோல, முத்தலாக் சொல்ல பெண்களுக்கு உரிமையுண்டு. மேலும், அந்த பெண் முத்தலாக் சொல்லும் கணவனிடமிருந்து அதிகமான ‘மெஹர்’ கேட்கலாம். முத்தலாக் நடைமுறையில் பெண்களின் கௌரவத்தை காப்பாற்ற இது போன்ற நிறைய வழிகள் உள்ளன,” என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முத்தலாக் குறித்த வழக்கு ஒன்றில், முடிவு எடுக்கும் உரிமை ஆண்களுக்கே அதிகம் உள்ளதால் ஷரியத் சட்டம் முத்தலாக்கை பயன்படுத்த ஆண்கள் மட்டுமே உரிமை கொடுப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருந்தது. இந்நிலையில், பெண்களும் முத்தலாக் கூறலாம் என்று தற்போது அது தெரிவித்தள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட குழு முத்தலாக் குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.