தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பங்கேற்கும் பெண்களின் சதவீதம் கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளதாக, அதற்கான இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 24ம் தேதி வரையிலான புள்ளிவிவரம், 2013 -14 ம் ஆண்டைவிட (52.82 சதவீதம்) குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் (NREGS) 13.34 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் 6.58 கோடி பெண்கள் உள்ளனர். அவர்கள் 49 சதவீதம் பேர். கொரோனா ஊரடங்கு காரணமாக, பெண்கள் பங்கேற்கும் நாள்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கணக்குப்படி, அது கடந்த எட்டு ஆண்டுகளைவிட குறைந்து 52.46 சதவீதமாக உள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2013 -14ம் ஆண்டைவிட 2016ம் ஆண்டில் 56.16 சதவீதம் உயர்ந்திருந்தது. தற்போதைய எண்ணிக்கை 2.24 சதவீதம் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால் பெண்களைவிட ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது காரணமாகக் கூறப்படுகிறது.
இந்திய அளவில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் நாட்களின் எண்ணிக்கையில் பெண்கள் பங்களிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.