இந்தியா

தற்கொலை செய்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் மீட்பு - நடந்தது என்ன? 

தற்கொலை செய்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் மீட்பு - நடந்தது என்ன? 

webteam

தற்கொலை செய்து கொண்டு விட்டதாக நினைத்த பெண் தற்போது பெங்களுரூவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

டெல்லியைச் சேர்ந்தவர் கோமல். இவர் டெல்லியிலுள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை பாரதிய கிஷான் சங்கத்தின் தேசிய செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். கோமலை கடந்த 5ஆம் தேதி முதல் காணவில்லை. எனவே இவர் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

இதனையடுத்து 6ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியிலுள்ள ஒரு பாலத்தில் இவருடைய கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் இவர் தற்கொலை செய்து கொள்ள போவதைப்  போல் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. எனவே இவர் கார் பாலத்தில் நிறுத்திவிட்டு ஹிந்தான் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் நினைத்தனர். 

ஆகவே காவல்துறையினர் ஹிந்தான் நதியில் இவரது உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மூன்று நாட்கள் ஆகியும் இவரது உடல் கிடைக்க படாததால் காவல்துறையினர் தேடும் பணியை நிறுத்தினர். எனினும் உளவுத்துறையின் தகவலின்படி கோமல் சில நபர்களிடம் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

இந்தத் தகவலை வைத்து காவல்துறையினர் கோமல் ஜெய்ப்பூரில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன்படி காவல்துறையினர் ஜெய்ப்பூர் விரைந்தனர். இருப்பினும் காவல்துறையினர் வருவதற்கு முன்பு கோமல் மும்பை சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பெங்களுரூ சென்றுள்ளார். இறுதியில் பெங்களுரூவில் கோமலை காசியபாத் காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரணைக்காக உத்தரப்பிரதேசம் அழைத்து வருகின்றனர். 

இறந்துவிட்டார் என நினைத்த பெண் மூன்று நாட்களுக்குப் பிறகு பெங்களுரூவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.