பூமி சவ்கான் fb
இந்தியா

Ahmedabad Plane Crash|10 நிமிடம் தாமதம்... கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண்!

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.38 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் விமானத்தில் இருந்த ஒரு பயணியை தவிர மீதமிருந்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் .

இந்தநிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை தவறவிட்ட பெண் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தனது கணவரோடு லண்டனில் வசித்துவரும் பூமி சவ்கான் என்ற பெண், விடுமுறையை கழிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார்.

பூமி சவ்கான்

விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சவுகானுக்கு விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், " நான் முற்றிலுமாக உருக்குலைந்து போனேன். என்னால் பேசக்கூட முடியவில்லை. விபத்தை எண்ணி பார்த்து எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என் உயிரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.