இந்தியா

தந்தையின் உறவினரால் 19 ஆண்டுகளாக வன்கொடுமை.. கமுக்கமாக இருந்த தாய்.. உ.பி. கொடூரம்! #MeToo

JananiGovindhan

குடும்ப உறவுகளால் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான சம்பவங்கள் பலவும் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன. அந்த வகையில் தனது ஏழு வயதில் இருந்து இரண்டாவது தந்தையின் உறவினர்கள் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததை 28 ஆண்டுகள் கழித்து கணவனின் உதவியுடன் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவியான 35 வயதுடைய அப்பெண் 19 வயது வரை தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து போலீசிடம் புகாராக அளித்திருக்கிறார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

முதலில் காவல்துறையை அணுகிய போது புகாரை ஏற்றுக் கொள்ளாததால் தேசிய பெண்கள் ஆணையம், முதலமைச்சரின் குறைதீர்க்கும் மையம் ஆகியவற்றை அணுகிய பிறகே 376 (வன்கொடுமை), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR போடப்பட்டிருக்கிறது.

FIR அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட பெண் ஏழு வயதாக இருக்கும் போது இரண்டாவது தந்தையின் உறவினர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதனால் கடுமையான வயிற்று வலியில் இருந்த அவர் தனது தாயிடம் நடந்ததை கூறியிருக்கிறார். அதற்கு அவர் சில மருந்துகளை கொடுத்து இது குறித்து யாரிடமும் பேசக் கூடாது என தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, அதே இரண்டாவது தந்தையின் வேறொரு உறவினரால் மீண்டும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இப்படியாக தன்னுடைய 19 வயது வரை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

முடிந்தவரை அவர்கள் தன்னை அணுகாதவாறு பார்த்துக் கொண்ட நேரத்தில் என்னுடைய அடக்கத்தை சீர்குலைக்கச் செய்தார்கள். இந்த நிலையில்தான் 2011ம் ஆண்டு ஜனவரியின் போது அப்பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதன் பிறகு அம்மா வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவர்கள் மீண்டும் பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான அப்பெண் பாலியல் கொடுமைகளால் ஏற்பட்ட மனக் குமுறலை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருகட்டத்தில் கணவனிடம் கூறியிருக்கிறார். அவர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருந்து கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று அவரது தாயார் மற்றும் உறவினர்களிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர்களோ பெண்ணின் கணவனை அடித்து விரட்டியிருக்கிறார்கள். பெண்ணின் தாயோ அவர் கணவனின் உறவினர்களுக்கு சப்போர்ட்டாக செயல்பட்டிருக்கிறார். இதனையடுத்து 4 மாதங்களாக இது குறித்து புகாரளிக்க சிரமப்பட்டு வந்தோம். தற்போது கணவனின் முழு ஆதரவும் கிடைத்ததை அடுத்து நிம்மதியாக இருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து பேசியுள்ள காவல்நிலைய அதிகாரி சவிதா திவேதி “பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் மீது தீவிர விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.