இந்தியா

ஊரடங்கில் பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

ஊரடங்கில் பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

webteam

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ராஜஸ்தானில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்ற இடத்தில் சிக்கிக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழலில் அவர், ஜெய்ப்பூரில் உள்ள வீட்டிற்கு நடைபயணமாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மதோபூர் படோடா பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது இரவு வந்ததால், போலீஸாரிடம் உதவி கேட்டுள்ளார்.

இரவு மட்டும் அப்பெண் தங்க இடமளிக்குமாறு கிராம மக்களிடம் போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். இடமில்லை என்ற கிராம மக்கள், அப்பெண்ணுக்கு கொரோனா இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறி தனிமையில் தங்க வைக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அரசுப் பள்ளிக் கட்டடத்தில் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து இரவில் பள்ளியில் புகுந்த அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுதொடர்பாக காலையில் அப்பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.