இந்தியா

பீகார்: கையில் துப்பாக்கியுடன் மேடையில் நடனமாடிய பெண் - வைரல் வீடியோவால் பரபரப்பு

Sinekadhara

பீகாரில் ஒரு பெண் கையில் துப்பாக்கியுடன் மேடையில் நடனமாடும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது துப்பாக்கிச்சூடு நடத்துவது உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் இன்றும் நடந்து வருகிறது. அது சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும் அங்குள்ள மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதங்களும் நடப்பதை தவிர்க்கமுடிவதில்லை. பீகாரில் சிவான் நகரில் கையில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. மெஜந்தா நிற லெஹங்கா அணிந்த பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நடனமாடுகிறார்.

மேடையில் ஏறி அந்த பெண்ணுடன் நடனமாட இளைஞர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களை துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்து நகரச்சொல்கிறார். பின்னர் தொடர்ந்து நடனமாடுகிறார். தனது நடனம் முழுக்கவும் கையில் துப்பாக்கியுடனேயே ஆடுகிறார் அந்த பெண். இதனால் அந்த பெண்ணுக்கு கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தாளி யாரேனும் துப்பாக்கியைக் கொடுத்தாரா அல்லது அந்த பெண் தனது தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்தாரா எனத் தெரியவில்லை.

துப்பாக்கி வைத்திருந்த அந்த பெண் மற்றும் உடனிருந்தவர்கள்மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பொதுக்கூட்டங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், திருமணம் அல்லது பிற நிகழ்ச்சிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கொண்டு கொண்டாடும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். அப்படி கையும் களவுமாக பிடிபட்டால் அந்த நபருக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.