பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியை, திருமணம் செய்வதாகக் கூறி பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மஹோப்பா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்கிஷன் சவுபே. இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசுக்கு தண்ணி காட்டி வந்த இவரை பிடிக்க பல வழிகளை கையாண்டும் முடியவில்லை. இதனால், அவர் பற்றிய தகவல் சொல்வோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் விதிக்கப்படும் என்று காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பால் கிஷனின் செல்போன் நம்பரை போலீசார் கண்டுபிடித்தனர். போன் செய்தால், ஆப் மூலம் தெரிந்துவிடும் என்பதால், வித்தியாசமாக அவனை மடக்க முடிவு செய்தனர். பால்கிஷனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். அதனால், பெண் ஊழியர் ஒருவர் பெயரில் ஒரு சிம் கார்டை வாங்கினர்.
அந்த நம்பர் மூலம் பால்கிஷனுக்கு போன் செய்தார், அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர். பிறகு ’ஸாரி, ராங் நம்பர்’ என்று வைத்துவிட்டார். இதற்கிடையே, உஷாரான பால் கிஷன், போலீசார் உளவு பார்க்கிறார்களோ என நினைத்து ஆப் மூலம் அந்த நம்பரை சோதனை செய்தார். அது, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் நம்பர் என தெரிந்ததும் நிம்மதி அடைந்தார்.
பிறகு சில நாட்கள் கழித்து அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் அதே நம்பருக்கு போன் செய்தார். பால்கிஷன் பேசினார். பிறகு இந்த ’ராங் நம்பர்’ நட்பு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், ’உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்றார் பெண் சப் இன்ஸ்பெக்டர். பெண் தேடிக்கொண்டிருந்த பால்கிஷன், ’முதலில் நேரில் சந்திப்போமே’ என்று கேட்டார்.
சரி என்ற பெண் சப் இன்ஸ்பெக்டர், பிஜோரி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வருமாறு கூறினார். அதன்படி சொன்ன நேரத்துக்கு முன்பே, ஏராளமான ஆசையோடு வந்தார் பால்கிஷன். அங்கு ஏற்கனவே பத்து பதினைந்து போலீசார், மப்டியில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். பெண் சப் இன்ஸ்பெக்டர் அங்கு வரவே இல்லை. இதனால் அவர் கொடுத்த நம்பருக்கு போன் செய்த பால்கிஷனை, ‘இந்த நம்பருக்குத்தான போன் பண்றீங்க?’ என்று கேட்ட போலீசார், மடக்கி பிடித்து சிறையில் தள்ளினர்.
வித்தியாசமான ஸ்டைலில், போலீசார் குற்றவாளியை கைது செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.