கல்லூரி விரிவுரையாளராக பணிபுரியும் 25 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வார்தா பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரியும் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வழக்கம் போல் இன்று கல்லூரிக்கு சென்றுள்ளார். இன்று காலை 7.15 மணிக்கு ஹிங்னகாட் நகரில் அரசுப் போக்குவரத்து பேருந்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். திடீரென அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி அந்த நபர் தீ வைத்துள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்த பயணிகள், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்தப் பெண் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பின்னர், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீக்காயங்களுடன் அவரை சேர்த்துள்ளனர். இந்த விபத்தால் அப்பெண் 40 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். இளம் பெண் மீது பொட்ரோலை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் விரிவுரையாளரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஒருவர்தான் இந்தக் கொடூரமான செயலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விக்கி நாக்ரலே என்பதும், அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பயன்படுத்தி தீ வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் விக்கி நாக்ரலேவை போலீசார் கைது செய்தனர்.
“இளம்பெண் மீது தீ வைத்த நாக்ரலே திருமணம் ஆனவர். அவருக்கு ஏழு மாதத்தில் ஒரு மகன் இருக்கிறார். தரோடா கிராமத்தைச் சேர்ந்த இவர், பால்ஹர்ஷாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண்ணை தொடர்ந்து சில காலமாக அவர் பின் தொடர்ந்துள்ளார்” என போலீசார் கூறியுள்ளனர்.