இந்தியா

தெலங்கானாவில் மீண்டுமொரு கொடூரமான கொலை: முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் ..!

தெலங்கானாவில் மீண்டுமொரு கொடூரமான கொலை: முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் ..!

webteam

தெலங்கானாவில் உடம்பில் துளியும் ஆடையில்லாமல் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் செவேல்லா நகருக்கு அருகே பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் உடம்பில் துளியும் உடையும் இல்லாத நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் தங்கடிபள்ளியில் வசிப்பவர்கள் இந்தச் சடலத்தை கவனித்துள்ளனர். விகராபாத் செல்லும் சாலையில் ஒரு பாலத்தின் கீழ் இவரைத் தூக்கி வீசிவிட்டு யாரோ சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கான ஆதாரங்களை சேகரித்தனர். அதனைக் கொண்டு அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான உள்ளூர் மக்கள் கும்பலாக சாலையில் கூடிவிட்டனர்.

இந்தக் கொலை குறித்து செவேல்லா காவல்நிலைய அதிகாரி பாலகிருஷ்ணா கூறுகையில், “அந்தப் பெண் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து இதுவரை எந்தத் துப்பும் இல்லை” எனக் கூறியுள்ளார். இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்து சார்பில் புகார் மனுவை பெற்றுள்ளோம். அதை வைத்து வழக்குப் பதிவு செய்வோம்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணை யாரோ பெரிய கல்லால் அடித்து கொன்றதாகத் தெரிய வந்துள்ளது, அவரது முகம் சிதைந்து போய் உள்ளதால் அவரை அடையாளம் காண்பது மிகவும் கடினம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைக்கு முன்னதாக இந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என ‘தி நியூஸ் மினிட்’ செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரி, “பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வெளிவந்ததும் இது குறித்து எங்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும். குற்றம் நடந்த இடத்திலிருந்து கூடுதல் தடயங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

செவேல்லா பகுதி பி.ரவீந்தர் ரெட்டி, (ஏசிபி), இந்தக் கொலை வேறு இடத்தில் நடந்திருக்கலாம் என்றும் அவரது உடல் பின்னர் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம். இதனைப் பற்றி விசாரிக்க நான்கு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார். கொலை நடந்த இந்தப் பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமராக்களை சோதனை செய்வதுடன், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காணாமல் போனவர் குறித்த வழக்கு விபரங்களை தெரிவிக்கும்படி காவல்துறையினருக்கு அறிவித்தப்பட்டுள்ளது.

இந்தக் கொலை கடந்த ஆண்டு நவம்பரில் ஹைதராபாத் புறநகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 27 வயது கால்நடை மருத்துவர் கொலையை நினைவுப்படுத்தும் விதமாக மாறியுள்ளது.