இந்தியா

இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்: அசத்தும் மெஹருன்னிசா

இந்தியாவின் முதல் பெண் பவுன்சர்: அசத்தும் மெஹருன்னிசா

webteam

கேளிக்கை விடுதிகளில் பவுன்சர்கள் எனப்படும் அதிரடி பாதுகாவலர்கள் இருப்பது வழக்கம். அப்படி தலைநகர் டெல்லியில் இரவு விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் பவுன்சராக பணியாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

அத்துமீறும் பெண் வாடிக்கையாளர்கள், போதைப்பொருட்களை கொண்டுவருவோர் மற்றும் மதுபான கூடத்தில் நடக்கும் சண்டையில் ஈடுபடுவோரை சமாளிப்பது என மெஹருன்னிசாவின் வேலை மிகவும் கடினமானது என்றாலும் அதனை அவர் விரும்பி செய்கிறார். பாரம்பரியமான, கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்த மெஹருன்னிசா, ராணுவம் அல்லது காவல்துறையில் சேர வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்தது என்கிறார். அந்த கனவு நிறைவேறாததால் இந்த வேலை தனக்கு திருப்தியளிப்பதாக உற்சாகத்துடன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, ‘பல நேரங்களில் என் சகோதரனே கேட்பான், எதற்கு இதுபோன்ற வேலை? ஏன் இரவில் வேலை செய்ய வேண்டும் என்று. எனது உறவினர்களும் கேட்பார்கள். எனது தாய், தந்தையின் நம்பிக்கையும், ஊக்கமுமே என்னை தைரியமாக வைத்திருக்கிறது. நான் தவறு எதையும் செய்யவில்லை. அதனால் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ என்கிறார் மெஹருன்னிசா.

டெல்லியில் உள்ள இந்த இரவு கேளிக்கை விடுதியில் ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் பொழுதுகளை உற்சாகத்துடன் கழித்துக்கொண்டிருக்க, கருப்புச்சட்டை. மிரட்டும் விழிகள், அதிரடி தோற்றத்துடன் மெஹருன்னிசா பாதுகாவலராக நின்று கொண்டிருக்கிறார். வழக்கமாக பவுன்சர்கள் எனப்படும் ஆண் அதிரடி பாதுகாவலர்களே இரவு விடுதிகளில் பாதுகாப்புக்கு இருக்கும் வேளையில் மெஹருன்னிசா இந்தியாவின் முதல் பெண் அதிரடி பாதுகாவலராக பத்து மணிநேரம் அசராமல் பணியாற்றுகிறார்.